மாற்றத்தைக் கொண்டு வருவதாக உளறும் நடிகர்களின் யோக்கியதை இவ்வளவுதானா?

கொரோனா தொடர்பான ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்டு விட்டது. மக்கள் பல இடங்களில் கூட்டமாக கூடுகிறார்கள் என்பது உண்மையே! ஆனால், மூடிய இடத்திற்குள் கூட்டமாக அமர்வது பேராபத்து என்ற எச்சரிக்கை எப்போதும் இருந்து கொண்டிருந்தது.

ஆனால், தனது ‘மாஸ்டர்’ திரைப்படம், பொங்கலுக்கு வெளியாவதால், தியேட்டர்களில் 100% இருக்கைகளை நிரப்பிக் கொள்வதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து உருக்கமான கோரிக்கை விடுத்தார். கிட்டத்தட்ட ‘கதறினார்’ என்றும் கிண்டல் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கெல்லாம் அதிமுக அரசு மசியாது; அந்தளவிற்கெல்லாம் ரிஸ்க் எடுக்காது என்று சொல்லப்பட்ட நிலையில், ஏதேதோ சில அரசியல் காரணங்களை முன்வைத்து விஜய்யின் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. அதாவது, ஒரு நடிகரின் கோரிக்கைக்கு, நடிகரால் தொடங்கப்பட்ட கட்சி அனுமதியளித்து விட்டது.

அதிமுக அரசின் முடிவு தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதை எதிர்த்து வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. மோடியின் அரசுகூட, இந்த முடிவை திரும்பப் பெறுமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல். வரும் நாட்களில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது!

நாட்டில் சிஸ்டம் சரியில்லை, ஊழல் மலிந்துவிட்டது, எங்கும் – எதிலும் முறைகேடு, கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும், வெளிப்படையான ஆட்சியைத் தர வேண்டும் என்றெல்லாம் கூவிக் கொண்டிருக்கும் நடிகர்கள், தங்களின் சினிமாத் தொழில் சார்ந்து எப்போதுமே நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்ததில்லை என்பதே இதுவரையான வரலாறு!

தற்போது, மக்களின் உயிர் சார்ந்த ஒரு முக்கியப் பிரச்சினையிலும், தனது சுயநலம்தான் பெரிது என்பதைக் காட்டியுள்ளார் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கியமான ஸ்டார் நடிகர்!