கொழும்பு

இலங்கையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து புகைப்படம் எடுக்கக் கூடாது என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்த விளக்கம் இதோ

இலங்கையில் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுக்கக் கூடாது என அரசின் குடியமர்வு மற்றும் குடிபெயர்வு துறை அறிவித்துள்ளதாக சமூக வல தளங்களில் செய்திகள் வருகின்றன.   இது இலங்கையில் உள்ள தமிழ்  பெண்கள் மத்தியில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்துக் குடியமர்வு மற்றும் குடிபெயர்வுத் துறை செய்தி தொடர்பாளர் கயான் மிலிந்த, “கடந்த 2015 ஆம் அண்டு சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிமுறையின்படி  புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  இந்த புதிய சட்டத்தின்படி கடவுச்சீட்டுக்கான புகைப்படம் எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகள் மற்றும் எவ்வித மாற்றங்களும் இருக்கக் கூடாது என அறிவிக்கபட்டுள்ளது.

எனவே முகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தி புகைப்படங்கள் எடுத்தால் அது நிராகரிக்கப்படும்.   இது தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து எடுக்கப்படுவதாகச் சொல்வது தவறானதாகும்.   அதே வேளையில் கடவுச்சீட்டுக்காகப் பொட்டு வைத்து  புகைப்படம் எடுப்பது விதிமுறைகள் படி செல்லாததாகும்.   அது மட்டுமின்றி செயற்கை மாற்றங்களுடன் புகைப்படம் இருந்தால் அதைக் கடவுச்சீட்டு வழங்கும் கணினி தன்னிச்சையாக நிராகரித்து விடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வர்த்தக நிறுவன உரிமையாளர் வாணி,,”கடவுச்சீட்டு புகைப்படத்தில் எவ்வித அடையாளங்களும் காட்டக்கூடாது என்பது தவறாந்து.  ஒரு திருமணமான தமிழ்ப் பெண் என்னும் முறையில் அதை நான் எதிர்க்கிறேன்.  நமது தமிழ் கலாசாரத்தின்படி நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்தே ஆகவேண்டும்.  இது எங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது.  இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்: எனத் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலரான நளினி ரத்ன ராஜா, “எந்த  அரசாக இருந்தாலும் புதுச் சட்டம் கொண்டுவரும் போது பெண்களைத்தான் குறி வைக்கின்றனர்.   பர்தா அணியக்கூடாது,  பொட்டு வைக்கக் கூடாது போன்ற விதிகள் பெண்களை மட்டுமே குறி வைக்கிறது.    ஒரு சிலர் பொட்டு வைத்த புகைப்படத்தைப் பார்த்தல் இவர் ஒரு தமிழ்  பெண் எனத் தெரிந்துவிடும் என்பதால் இது சரியானது எனக் கூறுகின்றனர்.   ஆயினும் பெண்களின் உடைகளிலும் அவர் உடல்களிலும் கலாச்சாரத்திலும் அரசு கட்டுப்பாடு விதிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.