விஜய், இந்து மத எதிரியா?

மெர்சல்” விஜய்

விஜய் நடித்த “மெர்சல்” படத்தில், சில காட்சிகள் மத்திய பாஜக அரசின்  நடவடிக்கைகளை கிண்டல் செய்வதாக எதிர்ப்பு தெரிவித்தது,  பாஜக கட்சி. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்த.. படத்தின் தயாரிப்பாளர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையே. “ஜோசப் விஜய்” என்று விஜய்யின் முழுப்பெயரைச் சொல்லி, “அவர் தன் கிறிஸ்துவ மத அடையாளத்தை மறைப்பது ஏன்? மெர்சல் படத்தில், கோயில்களுக்கு பதிலாக மருத்தவமனை கட்டுங்கள் என்று வசனம் பேசுகிறாரே..!  சர்ச், மசூதிகளுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் என்று சொல்வாரா” என்று மத ரீதியாக விவகாரத்தைத் திருப்பிவிட்டிருக்கிறார்கள் பாஜகவினர். இதுபெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்க்கு நெருக்கமான நகைச்சுவை நடிகர் ஒருவரிடம் பேசினோம். அவர்,  “விஜய் எந்தமத சாயலும் இல்லாதவர். அனைத்து மதங்களையும் நேசிப்பவர் அவர்.

தனது படம் வெளியாகும்போது, வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வந்து வழிபடுவார் விஜய். அங்கு வர முடியாத நிலையில், சென்னை பெசண்ட் நகரில் உள்ள மாதா ஆலயத்துக்குச் சென்று வணங்குவார்.

மாதா மீது அவருக்கு இருக்கும் அதே அளவு பக்தி, பிள்ளையார் மீதும் உண்டு. அதுவும் பிள்ளையார் பட்டி விநாயகர் என்றால் அவருக்கு அதீத பக்தி. தனிப்பட்ட முறையில்கூட ஏதேனும் பிரச்சினை என்றால், “அப்பனே.. விநாயகரப்பா” என்று முணுப்பார்.. அவரது பெரும்பாலான படங்களில் பிள்ளையார் கோயில் காட்சி இருக்கும். சில  படங்களில் பிள்ளையாருடன் பேசுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றதை கவனிக்கலாம்.

பட பூஜையில் விஜய்

அது மட்டுமல்ல பட பூஜையின்போது அத்தனை உருக்கமாக கடவுளை வழிபடுவார் விஜய். இந்துவான நானே அத்தனை உருக்கத்தோடு வழிபடுவதில்லை” என்றவர்.. “அய்யய்யோ.. இதையும் பிரச்சினையாக்கி என்னை கார்னர் செய்யப்போறாங்க.. என் பெயரைப்போடாதீங்க” என்றார் பதறியபடி.

காரைக்கால்  விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த   குமார், “இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றான ஜாதகம் பார்ப்பதிலும் விஜய்க்கும்  அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த நம்பிக்கை உண்டு.

அவர் நடித்த தலைவா படத்தில் பலவித சிக்கல்கள். அதன் பிறகு அவர் நடித்த படம் “ஜில்லா”. இந்தப்ப படம் வெளியாகும் முன்பாக… அவரது குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு தனது மனைவி சங்கீதாவுடன் வந்தார் விஜய்.

விஜய் – சங்கீதா

அதிகாலை வந்தவர், நளன்குளத்தில் முறைப்படி  நீராடினார். பிறகு  ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர், ஸ்ரீ பிரணாம்பிகை சன்னதிகளில் வழிபாடு செய்தார்.

தொடர்ந்து, ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னதி அருகே நடைபெற்ற நவகிரஹ ஹோமத்தில் பயபக்தியுடன் கலந்து கொண்டார். அதன் பிறகு  ஸ்ரீ சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டுச் சென்றார்” என்கிறார் ரசிகர் குமார்.

விஜய்யைப் போலவே அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் மதவேறுபாடு பார்க்கமாட்டார். சிவபெருமான்தான் அவரது இஷ்ட தெய்வம்.

எத்தனையோ கோயில்களின் திருப்பணிக்கு எந்தவித விளம்பரமும் இன்றி நிதி அளித்திருக்கிறார்.

வெளிப்படையாக நிதி அளித்தது மிகக்குறைவான தருணங்களில்தான்.

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி. – ஷோபா

தர்புமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில் கிரிவலத்துக்கு மின் விளக்கு அமைத்துத்தந்தது அதில் ஒன்று.

காவேரிபட்டினம் அருகில் உள்ளது சென்னீர்ஸ்வரர் மடம் சிவன் கோயில். அந்த பகுதியில் மிகவும் பிரபலமானது. இங்கு மாதாமாதம் பவுர்ணமி  அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வார்கள். மலைப்பாதையைச் சுற்றி ஆங்காங்கே தற்காலிக மின் விளக்குகள் அமைக்கப்படும். அது போதிய அளவில் இருக்காது. அதனால் மக்கள் சிரமப்பட்டனர்.

சிவா

இத குறித்து தர்மபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர், எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கூறினார். அதன் பிறகு நல்ல நாள் பார்த்து கோயிலுக்கு வந்தார் எஸ்.ஏ.சி. மனமுருக சிவனை வழிபட்டவர், மலையைச் சுற்றி சுமார் 12 கி.மீ. கிரிவலப்பாதையில் மின் விளக்கு அமைக்க ஏற்பாடு செய்தார். சுமார் பத்து லட்ச ரூபாய்க்குமேல் செலவழித்து போடப்பட்ட அந்த மின் விளக்குகள் இன்று மக்கள் அச்சமின்றி கிரிவலம் செல்ல உதவியாக இருக்கின்றன.

பெண்ணேஸ்வர மடம் சிவன் கோயிலில் எஸ்.ஏ.சி. – ஷோபா

தர்மபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் சிவா இது குறித்து நம்மிடம் கூறும்போது, “மின்விளக்குகள் அமைக்கப்பட்டவுடன் கோயிலுக்கு வந்தார் விஜய். பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதையோடு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவனை மனமுருகி வழிபட்டவர், பிறகு மின்விளக்கை ஆன் செய்து துவக்கிவைத்தார்.

பெண்ணேஸ்வர மடம் சிவன் கோயிலில் விஜய்

அதன் பிறகு பேசும்போது, “எனக்கு கிடைத்தவை அனைத்தும் சிவன் கொடுத்தே” என்று உருகிப்போய் சொல்லிவிட்டுச் சென்றார். அது மட்டுமல்ல… அதன் பிறகு அவ்வப்போது, மின் விளக்குகள் சரிவர எரிகின்றனவா.. கிரிவலம் செல்லும் மக்களுக்கு வேறு ஏதேனும் வசதிகள் செய்து தரவேண்டுமா என்று கேட்பார்” என்கிறார் தர்மபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் சிவா.

மெர்சல் படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பாகவும் விஜய்க்காக அவரது கிரக நிலைப்படி சூரியனார் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஆடுதுறை அருகே இருக்கும் சூரியனார் கோயில் பரிகார தலங்களில் முக்கியமானது.

சூரியனார் கோயிலில் “மெர்சல்” வெற்றிக்காக சிறப்ப பூஜை

தஞ்சை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் சரவணன், “கடந்த 18ம் தேதி தீபாவளி அன்று மெர்சல் ரிலீஸ் ஆனது. அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை 15ம் தேதி, சூரியனார் கோயிலில் விஜய் பெயரில் சிறப்பு பரிகார பூஜை நடத்தினோம். அங்கு அளிக்கப்பட்ட பிரசாத்ததை விஜய்க்கும் கொண்டுபோய் கொடுத்தோம். வழக்கம்போல மகிழ்ச்சியோடும், பயபக்தியோடும் பெற்றுக்கொண்டார்” என்கிறார் சரவணன்.

“விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த். அவர், மேல்மலையனூர் அம்மனின் தீவிர பக்தர். பெரும்பாலும் மஞ்சள் உடையில்தான் இருப்பார்.  விஜய் மத ரீதியாக யோசிப்பவராக இருந்தால் இதையெல்லாம் அனுமதிப்பாரா” என்றும் கேட்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

சரவணன்

விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். “ஸ்ரீ ராகவேந்திரா” என்ற பெயரில் தானே பாடி பக்தி பாடல் ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். மன அமைதிக்காக அவ்வப்போது விஜய் கேட்பதும் இந்த ஆல்பத்தைத்தானாம்,

“சென்னையில் திருவையாறு” என்ற இசை நிகழ்ச்சி  வருடாவருடம் நடப்பது அனைவருக்கும் தெரியும். கர்நாடக இசை நிகழ்ச்சியான இதில் பக்திப்பாடல்களே பிரதானம் என்பதும் அனைவருக்கும் தெரியும். இதில்  ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டு மனமுருகி பாடுவார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் இவர்.

“கிறிஸ்துவ இந்து மதத்தின் மீது மட்டமல்ல… இஸ்லாமிய மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர் விஜய்” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்களும், ரசிகர்களும்.

விஜய் நடித்த துப்பாக்கி ரிலீஸ் ஆன சமயத்தில், அதில்  இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாக காட்சிகள் இருக்கின்றன என்றும் சர்ச்சை கிளம்பியது. இஸ்லாமிய அமைப்பு ஒன்று விஜய் மற்றும் அவர் அப்பா எஸ்.ஏ.சி. வசிக்கும் வீடுகளை முற்றுகையிட முயன்றது. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அப்போது அரசிடம் முறையிட்டனர் இருவரும்.

ஷோபாவின் “ஸ்ரீராகவேந்திரா” பக்தி ஆல்பம்

“இப்போது விஜய்யை இந்து மத எதிரி என்று சிலர் சொல்வது போல அப்போது அவரை இஸ்லாமிய மத  எதிரி என்றார்கள் வேறு சிலர். ஆனால் விஜயக்கு இஸ்லாமிய இஸ்லாமிய மதத்தின் மீதும் நம்பிக்கை உண்டு. அவரது பிறந்தநாள் அன்று சென்னை பனையூரில் இருக்கும் அவரது அலவவலகத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு விருந்து அளிப்பார்” என்கிறார் ரசிகர் ஆனந்த்.

மேலும், “ரசிகர்களான நாங்களும் அவரது பிறந்தநாள் அன்று அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் நடக்கும். தவிர ரம்ஜான் மாதத்தில் பள்ளி வாசலில் நடக்கும் ஸகர் – நோன்பு திறப்பது எல்லாம் ரசிகர் மன்றம் சார்பில் நடப்பதும் உண்டு “ என்கிறார் ரசிகர் ஆனந்த்.

மொத்தத்தில் விஜய்க்கு நெருங்கியவர்கள், திரையுலகில் தொடர்புடையவர்கள், ரசிகர்கள் எல்லோரும் சொல்வது இதுதான்:

“எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கை உடையவர் விஜய். அவருக்கு தேவையின்றி குறிப்பிட்ட மத முத்திரை குத்தாதீர்”