லண்டன்:

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் இணைய மீடியாக்களை ஐரோப்பிய போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் சைபர் நிபுணர்கள், கனடா மற்றும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளின் இணைய மீடியாக்களை அடையாளம் கண்டு அவற்றை முடக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த வகையில் ‘அமாக் நியூஸ் ஏஜென்சி’ ஐஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணைய தளமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணைய மீடியாக்கள் முடக்கப்பட்டதன் மூலம் ஐஎஸ் ஜிகாதிகளை தற்போது அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25, 26ம் தேதிகளில் யூரோபோல் உறுப்பினர்கள் இணைந்து பெல்ஜியம், பல்கேரியா, பிரான்ஸ், நெதர்லாந்து, ரோமேனியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த ஆபரேஷனை மேற்கொண்டனர்.

இதன் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஐஎஸ் மீடியாவுக்கு பின்னால் இருக்கும் நிர்வாகிகளை அடையாளம் காண முடியும் என்று யூரோபோல் தெரிவித்துள்ளது. மேலும், இளைஞர்கள் மூளைச் சலவை செய்வதும், பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.