தேர்தலில் மந்திரியை எதிர்த்து  பெண் போலீஸ் போட்டியா?
குஜராத் மாநிலம் சூரத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இரவு நேரத்தில் ரோட்டில் சுற்றித்திரிந்த இரண்டு இளைஞர்களை ,அங்கு  ரோந்து வந்த பெண் போலீஸ் காவலர் சுனிதா என்பவர் விசாரித்தார்.
அப்போது அங்கு வந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமாரின் மகன் பிரகாஷ், சுனிதாவுடன் மோதலில் ஈடுபட்டார்.
‘’ இதே ரோட்டில்  ஆண்டு முழுக்க நிற்க வைத்து விடுவேன்’’ என்று பெண் போலீசை மந்திரி மகன் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
பெண் போலீசை ,மந்திரி மகன் மிரட்டும் ஆடியோப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனால் மந்திரி மகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் , உடனடியாக அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.
ஆனால் மந்திரி மகனால் அவமதிப்புக்குள்ளான சுனிதா, போலீஸ் தலைமையகத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
’நீதிக்குப் பரிசு தண்டனையா?’’ என நிலை குலைந்து போன சுனிதா, தனது பெண் போலீஸ் உத்தியோகத்தை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில், மந்திரி மகனின் மிரட்டலுக்கு அடிபணியாமல் கடமையாற்றிய சுனிதாவை ‘பெண் சிங்கம்’ என்று வர்ணித்து அங்குள்ள சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.
’’குஜராத் சட்டசபைத் தேர்தலில் அமைச்சர் குமாரின் வரச்சா தொகுதியில் அவரை எதிர்த்து சுனிதா போட்டியிட வேண்டும்’’ என்றும்  ஏராளமானோர், வலியுறுத்தியுள்ளனர்.
சுனிதா களம் காண்பாரா?
காலம் பதில் சொல்லும்.