இஷா காதலை ஏற்க வைத்த முகேஷ் – நீதா அம்பானி காதல் கதை!

லகின் மிக பிரம்மாண்ட திருமணமாக நடந்து முடிந்திருக்கிறது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். சுமார் 100 மில்லியன் டாலர் செலவில் நடத்தப்பட்ட மிக காஸ்ட்லியான இந்தத் திருமணத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டனில் இருந்து  நடிகர் ரஜினிகாந்த் வரை   உலக வி.ஐ.பி.க்கள் முதல் உள்ளூர் செலிபிரேட்டிகள் வரை பலரும் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.

இந்த அளவு பகட்டாக நடந்த திருமணத்தின் பின்னணியில் ஒரு எளிய ஆனால் வலுவான காதல் இருக்கிறது.

மணமகன் ஆனந்த், பிராமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆவார். இந்த பிரமால் குழுமம் வெறும் (!)  25,000 கோடி ரூபாய் மதிப்புள்ளது. அதாவது அம்பானியின் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிய நிறுவனம் அல்ல. ஆனாலும் இந்தத் திருமணத்துக்கு மணமகள் இஷாவின் தந்தை முகேஷ் அம்பானியும், தாயார் நீதா அம்பானியும் மனமார சம்மதம் தெரிவித்தனர்.

இந்த சம்மதத்துக்குப் பின்னாலும் ஒரு  நெகிழ்வான காதல் கதை இருக்கிறது.

ஆம்.. இஷாவின் தாயாரும் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீதா  மிக மிக சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அதே நேரம் அவர் ஒரு சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீத்தாவின் நடனம் நடந்தது. அதைக் காணும் வாய்ப்பு முகேஷூக்கு வாய்த்தது.

நீதாவின் நடனத்தக் கண்ட அவர், மனதிற்குள் நீதாவை வரித்துக்கொண்டார்.

ஆனந்த் – இஷா

தனது தந்தை தந்தை திருபாய் அம்பானியிடம் இதை எப்படிச் சொல்வது என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் தயக்கத்தை உதறி தனது காதல் குறித்து தந்தையிடம் தெரிவித்தார்.

ஆச்சரியம்.. தந்தை திருபாய் அம்பானி அந்த காதலை ஏற்றுக்கொண்டார்.

அது மட்டுமல்ல நீதாவை போனில் தொடர்புகாண்ட திருபாய் அம்பானி,  ‘நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா’ என்று கேட்டார்.

“உலகின் குறிப்பிடத்தகுந்த பணக்காரர், மிகப்பெரும் தொழிலதிபர்.. நம்மை ஏன் அழைக்கிறார்” என்று ஆச்சரியம் அடைந்தார் நீதா. கூடவே பயமும் ஒட்டிக்கொண்டது.

ஆனாலும் திருபாய் அம்பானியை மறுநாள் அவரது அலுவலத்தில் சந்தித்தார் நீதா.

அவரை அன்போடு வரவேற்ற திருபாய், நீதாவின்  பொழுதுபோக்கு, நடனத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்ட விதம் குறித்தெல்லாம் பேசி சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார். பிறகு “என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா” என்று புன்னகையுடன் கேட்டார்.

இயல்பு நிலைக்கு வந்த நீதா  “நிச்சயமாக..” என்றார். அதே போல் திருபாய் மகன் முகேஷை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார்.

முகேஷ் – நீடா

இருவரும் பரஸ்பரம் இயல்பாக பேசிக்கொண்டனர். அடுத்த சிலமுறையும் இந்த சந்திப்புகள் தொடர்ந்தன.

ஒரு முறை முகேஷூம்  நீதாவும் காரில் பயணித்தனர்.  மும்பையின் போக்குவரத்து நிரம்பிய சாலை. வண்டி டிராபிக் சிக்னலில் நிற்க… தன் மனதைத் திறந்தார் முகேஷ். தனது காதலை வெளிப்படுத்தினார்.

நீதா பதில் ஏதும் சொல்லவில்லை. சில விநாடிகள் பொறுத்துப் பார்த்தார் முகேஷ். மவுனம் நீடிக்கவே… “பதில் கூறினால்தான் காரை எடுப்பேன்” என்று செல்லமாக மிரட்டினார்.

வெட்கத்துடன் நீதா காதலை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து கடந்த 1985-ம் வருடம் முகேஷ் – நீதா  திருமணம் நடந்தது.

பெரும்பாலான விலகலிலோ திருமணத்திலோ முடிந்துவிடும். ஆனால் நீதா மீதான முகேஷின் காதல் சாகா வரம் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.

முகேஷ் அம்பானிக்கு  தனது பிறந்தநாளை  கொண்டாடுவதில் விருப்பமே இருந்ததில்லை. ஆனாலும் நீதாவின் வற்புறுத்தலுக்காக தனது ஐம்பதாவது பிறந்தநாளை  கொண்டாடினார். அப்போது, நீடா அம்பானிக்கு 62 மில்லியன் யு.எஸ். டாலர்கள் மதிப்பு கொண்ட ஜெட் விமானத்தை பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

இந்தத் தம்பதிக்கு காதலின் விளைவாக இஷா, ஆகாஷ், ஆனந்த் என்ற மூன்று பிள்ளைகள்.

காதலைக் கொண்டாடும் முகேஷ், தனது மகளின் காதலையும் ஏற்று பிரம்பாண்டமாய் திருணத்தை நடத்தி முடித்திருக்கிறார்.