தமிழகத்தில் சர்வதேச தரத்தில்  விளையாட்டு பயிற்சி அகாடமி! : ஈசா நிறுவனர் ஜகி வாசுதேவ்  அறிவிப்பு

மிழகத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக சர்வதேச தரத்தில் ஈஷா விளையாட்டு பயிற்சி அகாடமி ஒன்று தொடங்கப்படும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் தெரிவித்தார்,.

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் ‘ஈசா கிராமோத்சவம்’ என்னும் மாபெரும் விளையாட்டு திருவிழா ஈரோடு மாவட்டம் டெக்ஸ்வேலியில்  நடைபெற்றது.    இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு டெக்ஸ்வேலியில்  நடைபெற்றது.

இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ்  பேசியதாவது:

“நம் கிராமங்களில் உழவு ஓட்டுவது, விதை விதைப்பது, அறுவடை செய்வது என அனைத்திலும் ஒரு ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டங்கள் நிறைந்து இருந்தது. ஆனால், நம் நாடு கடந்த சில தலைமுறைகளாக ஏழ்மையில் இருந்த காரணத்தால் அந்த கொண்டாட்டங்கள், கிராமிய கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள் காணாமல் போய்விட்டன. அதை மீட்டெடுப்பதற்காக ஈஷா கிராமோத்சவம் என்னும் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.  இந்தாண்டு கிராமோத்வசத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்துகொண்டுள்ளது ஒரு மகத்தான ஒரு செயல்.

ஒருவருடைய வாழ்க்கை கொண்டாட்டமாகவும் உற்சாகமாகவும் நடக்க வேண்டும் என்றால் விளையாட்டு என்பது மிக அவசியமானது. அந்த நோக்கத்தில், சர்வதேச தரத்தில் ஒரு விளையாடு அகாடமியை ஈஷா உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த அகாடமியில் பளு தூக்குதல், வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு தரமான பயிற்சி வழங்கப்படும்.

ஆந்திர பிரதேசத்தில் மாவட்டந்தோறும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். விளையாட்டு மேம்பாடு தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தமிழக அரசுக்கு ஒரு பரிந்துரை அளிக்க உள்ளது.

நம் நாட்டு குழந்தைகளிடம் ஏராளமான திறமைகள் உள்ளன. ஆனால், அவர்களுக்கு சரியான வயதில் விளையாட்டு பயிற்சி கிடைப்பதில்லை. டில்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு சென்று பயிற்சி பெறுவது என்பது மிக சிரமமான ஒன்று.

1990-களில் பளு தூக்குதல் போட்டியில் தமிழக வீரர்கள் சிறந்து விளங்கினர். ஏராளமான பதக்கங்கள் வென்றனர். அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும்.

இந்தியாவில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் ஆகிய இரண்டும் மிக முக்கிய தொழில்களாக உள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக மக்கள் பயன்படுத்திய ஆடைகளில் 60 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கிழக்கு இந்திய கம்பேனி இந்தியாவுக்கள் நுழைந்து தேசத்தை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து ஆடை ஏற்றுமதியை 90 சதவீதம் வரை இல்லாமல் ஆக்கியது. இதனால் ஏராளமான நெசவுவாளர்கள் வறுமையால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. நம் நெசவு பாரம்பரியத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். இதற்காக, நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சி நடத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் 120 விதமான ஆடைகளை உலக தர டிசைனர்களிடம் எடுத்து செல்ல உள்ளோம்.

கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நதிகளை மீட்போம் இயக்கத்தின் கொள்கை வரைவை (Policy) நிதி ஆயோக் அமைப்பு தேசிய கொள்கை வரைவாக அங்கீகரித்துள்ளது. மேலும், அந்த வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது.

தற்போது மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் 700 கோடி மரங்கள் நடுவதற்கு முயற்சிகள் நடந்துள்ளது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தின் முக்கிய ஆதாரமாக உள்ள காவேரியை மீட்பதற்கும் திட்டம் உள்ளது. இதற்காக, தலை காவேரியில் இருந்து தமிழக டெல்டா மாவட்டங்கள் வரை காவேரி கரை ஓரங்களில் மரம் நட திட்டமிட்டுள்ளோம்” என்று ஜகி வாசுதேவ் தெரிவித்தார்.