பாகிஸ்தான் நீதித்துறையில் ஐஎஸ்ஐ தலையீடு : நீதிபதி ஷாகத்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டில் நீதித்துறை நடவடிக்கைகளில் அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலையிடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஷாகத் அஜிஸ் சித்திக் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு நகரம் இஸ்லாமாபாத்,   இந்த நகரில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிபவர் ஷாகத் அஜிஸ் சித்திக்.   இவர் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலையும் உச்சநீதிமன்றத்துக்கு ஒரு கோரிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

ஷாகத், “பாகிஸ்தான் நாட்டு  உளவுத்துறையான ஐ எஸ் ஐ நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறது.   அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது.   பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் வழக்கு உட்பட பல வழக்குகளில் ஐ எஸ் ஐ குறுக்கீடு செய்துள்ளது.

என்னை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமைப்பதாக கூறி என்னை அணுகியது.   ஐ எஸ் ஐ தனது விருப்பத்த்துக்கு ஏற்ப பல அமர்வுகளை உருவாக்கி உள்ளது.  இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி இவ்வாறு கூறியது பாகிஸ்தான் நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.    பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் காஃபூர், “இந்த குற்றச்சாட்டு உண்மையானதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.  உணமை எனில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.