டமாஸ்கஸ்:

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை வீழ்த்திய அமெரிக்க ஆதரவு சிரியா படைகள், ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கொடியேற்றினர்.


சிரியாவில் ஐஎஸ்.தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். இதனையடுத்து, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க ஆதரவு சிரியா ஜனநாயக படை அறிவித்துள்ளது.

ஜிகாதிக் குழுவின் கடைசி கட்டுப்பாட்டு இடமாக இருந்த பாகூஸில், சிரியா ஜனநாயக படை ஆயுதப் போராளிகள் வெற்றிக் கொடிகளை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள்.

சிரியா மற்றும் ஈராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தனது பிராந்தியத்தை அந்த அமைப்பு இழந்து வந்தாலும், அந்தப் பகுதிகள் சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

எனினும், நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் ஐஎஸ் அமைப்பு தனது இருப்பை தக்கவைத்திருக்கிறது.

இந்நிலையில்,கிழக்கு சிரியாவில் உள்ள பாகூஸ் கிராமத்தில் மீதமிருந்த ஆயுதப் போராளிகள் பதுங்கி இருந்த நிலையில், மார்ச் மாதத் தொடக்கத்தில் ஐஎஸ் மீதான இறுதி தாக்குதலை குர்தீஸ்கள் வழிநடத்தும் சிரியா ஜனநாயக படை தொடங்கியது.

இதனையடுத்து, கிழக்கு சிரியாவில் உள்ள ஐஎஸ். தீவிரவாத இயக்கத்தின் கட்டுப்பாட்டு அலுவலகத்தை கைப்பற்றிவிட்டதாக குர்திஷ் படைகள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

இதனையடுத்து,சுரங்கங்களிலிருந்து ஐஎஸ்.தீவிரவாதிகள் வெளியேறி அமெரிக்க ஆதரவு குர்திஷ் படைகளிடம் சரணடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ். தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டபின், குர்திஷ் செய்தி தொடர்பாளர் ஜியாகர் அமெத் கூறும்போது, “ஐஎஸ் படைகள் முற்றிலும் சரணடையவில்லை. முகத்தை மறைத்தபடி இன்னும் பலர் சுரங்கங்களுக்குள் மறைந்துள்ளனர். ஐஎஸ். ஸலீப்பர் செல்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் உள்ளன.
மீதமுள்ள ஐஎஸ்.தீவிரவாதிகளை பிடிக்க சிரியா படைகள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றன.

கடந்த ஜனவரியிலிருந்து 5 ஆயிரம் ஐ.எஸ்.படைகள், அவர்களது உறவினர்கள் 24 ஆயிரம் பேர் மற்றும் 66 ஆயிரம் பொதுமக்கள், ஐஎஸ்.பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றார்.