ஐஎஸ்எல் கால்பந்து – ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வென்ற மும்பை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது மும்பை அணி.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில், மும்பை அணியின் விக்னேஷ் தட்சிணாமூர்த்தி முதல் கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். அதற்கு பதிலடி கொடுக்க, ஐதராபாத் அணி எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. எனவே, முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

பின்னர், இரண்டாவது பாதி ஆட்டம் துவங்கியது. 59வது நிமிடத்தில் மும்பையின் ஆடம் லே பாண்ட்ரே மற்றொரு கோலடித்து மும்பை அணிக்கு வலுவான முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஐதராபாத் அணி, கோலடிக்க பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எதுவும் பலனளிக்காத காரணத்தால், ஆட்டம் 2-0 என்ற கணக்கில் மும்பைக்கு சாதகமாக அமைந்தது.