கொச்சின்: கேரள மாநிலம் கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கோலாகல விழாவுடன் துவங்கியது.

சொந்த மண்ணில் துவங்கும் கால்பந்துப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட கேரள அணி, தனது முதல் லீக் போட்டியில், கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.

உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய இப்போட்டியின் துவக்கத்திலேயே கேரள அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியின் 6வது நிமிடத்தில் கொல்கத்தா அணி ஒரு கோல் அடித்தது.

இதனால், கேரள ரசிகர்கள் அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் பெனால்டிக் வாய்ப்பு மூலம் கேரள கோலடித்து சமன் செய்தது. பின்னர், 45வது நிமிடத்திலும் கேரளா பந்தை மீண்டும் வலைக்குள் தள்ளி இன்னொரு கோலைப் பெற்றது.

முதல் பாதியை கேரள அணி 2-1 என்ற முன்னிலையுடன் முடித்தது. ஆனால், இரண்டாவது பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாமல் போனதால், கேரள அணியே இறுதியில் வென்றது.

போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் கோலாகல துவக்க விழா நடைபெற்றது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகமென்பதும் குறிப்பிடத்தக்கது.