ஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் மூன்று வாரங்களாக நடத்திய போராட்டத்தை நிறுத்திக்கொள்ள இஸ்லாமிய மதவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானிய சட்ட அமைச்சகம் மக்கள் பிரதிநிதிகள் பதவி ஏற்பு உறுதிமொழியில் சில மாற்றங்கள் கொண்டு வந்தது.  அதையொட்டி இஸ்லாமிய மதவாதிகள் எதிர்ப்புப் போராட்டம் மூன்று வாரங்களாக நடத்தி வருகின்றனர்.  பல இடங்களில் போராட்டம் எல்லை மீறி வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது.   இதனால் பாகிஸ்தான் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

தற்போது போராட்டங்களை நிறுத்திக் கொள்ள இஸ்லாமிய மதவாதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.  இது குறித்து போராட்டக் காரர்களும், பாக் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசியும் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட உள்ளனர்.  அதனால் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் ஜாகித் அமீது ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.  ஜாகித் அமீது  கொண்டு வந்த உறுதி மொழி திருத்தத்தில் முகமது நபியை இறைவனின் கடைசி தூதர் என குறிப்பிடாததற்காக போராட்டம் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  முகமது நபி தான் இறைவனின் கடைசி தூதர் என்பதும் அவருக்குப் பின் இறைவனின் தூதர் யாரும் இல்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஆகும்.