துபாய்:

ஈரானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் தெஹக்ரானில் இரு தினங்களுக்கு முன் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அந்த பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

5 முகமூடி அணிந்த ஐஎஸ் வீரர்கள் இதில் உரையாற்றுகின்றனர். அவர்கள் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர். அந்த வீடியோ ஐஎஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,‘‘ ஈரானில் ஜிகாத்தை தொடங்க அல்லா எனக்கு அனுமதி வழங்கிவிட்டார். முஸ்லிம் மக்கள் என்னை பின் தொடர வேண்டும். இதற்கான தீப்பொறி கிளம்பிவிட்டது. இது எளிதில் அடங்காது. இஸ்லாதிற்காக நாங்கள் சண்டையிட்டு வருகிறோம்.

தற்போது ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சுற்றில் சவுதி அரேபியாவுக்கு இந்த நிலை ஏற்படும். அல்லாவின் அருளால் உங்கள் நாட்டிலேயே எதிர்த்து போராடுவோம். நாங்கள் யாருக்கும் ஏஜென்ட்கள் கிடையாது. அல்லா மற்றும் அவரது தூதர்கள் சொல்வதை தான் கேட்போம். நாங்கள் இஸ்லாத்திற்காக தான் சண்டையிடுகிறோம். ஈரான் அல்லது அரேபிய பிராந்தியங்களை குறிவைத்து சண்டையிடவில்லை’’ என்று தெரிவித்தார்.

சிரியா மற்றும் ஈரானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் அமைப்பு கடந்த காலங்களில் சவுதி பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளது. மேலும் தற்போது சவுதி, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கூறி கத்தாருடன் ராஜாங்க உறவுகளை முறித்துள்ளன. இதைத் தொடர்ந்தே ஐஎஸ் அமைப்பு சவுதிக்கு எதிரான மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.