இஸ்லாமியர்களின் ‘தலாக்’ விவாகரத்து: மத்திய அரசு எதிர்ப்பு!  

டில்லி,

ஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான ‘ தலாக்’ முறைக்கு, இஸ்லாமிய மதத்தினரிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மத்திய அரசும்  எதிர்ப்பு தெரிவித்து  உள்ளது.

இஸ்லாமியர்களின்  கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால் ஷரியத்  மத சட்டப்படி தலாக் சொல்லி விவாகரத்து செய்வது வழக்கம்.

talak

மூன்று முறை ‘தலாக்’ சொல்லி,  கட்டிய மனைவி தள்ளி வைத்துவிட்டு, அடுத்த நிக்காஹ் எனப்படும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். இஸ்லாமிய சட்டப்படி ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால், இஸ்லாத்தில் சொல்லப்படுவது ஒருத்தருக்கு ஒருத்தி என்பதுதான் கோட்பாடு. ஆனால், தற்போது இதை யாரும் பின்பற்றுவதில்லை.

விருப்பமில்லை என்றால் உடனே ஜமாத்தை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்து தலாக் சொல்லி பிரிந்து விடுகிறார்கள்.

இதுபோன்ற செயல்களை தடுக்கும் பொருட்டு, தலாக்-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பலர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

மனுவை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள்,  மத்திய அரசிடம் விளக்கம்  கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

அதை ஏற்று, மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் அதன் கூடுதல் செயலாளர் முகுலிதா விஜயவர்கியா 29 பக்க பதில் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அதில், முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள ‘3 முறை தலாக்’ நடைமுறைக்கும், பலதார மணத்துக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

talak1

இந்திய அரசியல் சட்டம் பாலின சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் வலியுறுத்துகிறது. ஆண்–பெண் சமத்துவமும், பெண்களின் கண்ணியமும் விவாதத்துக்கு அப்பாற்பட்டவை.

அதில் சமரசத்துக்கு இடமில்லை. ஆண்களின் பழக்கத்தால் பெண்கள் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் எந்த நடைமுறையும் அரசியல் சட்டத்துக்கு முரணானது.

பெண்களுக்கான சம உரிமையை மறுப்பதற்கு மதம் காரணமாக இருக்கலாமா என்ற அடிப்படை கேள்வியை கோர்ட்டுதான் தீர்மானிக்க வேண்டும்.

மேற்கண்ட அடிப்படையில், இந்த வழக்கத்தை கோர்ட்டு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலாக் என்றால் என்ன? எப்படி நிறைவேற்றப்படுகிறது…?

இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம் என்பது இந்திய பீனல்கோடு போல வரிசையாக தெளிவாக எழுதி வைக்கப்பட்ட புத்தகம் அல்ல. குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் ஆங்காங்கே காணப்படுபவைகளைக் கொண்டு எடுத்தாளப்படுபவைகள்.

“தலாக்” என்பது இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம். ‘தலாக்’  என்பது  “நபிவழி” என்றும் கூறுகின்றனர்.

ஒரு பெண்ணை மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால், அவள் கணவனிடம் இருந்த விலக்கப்படுகிறாள், அதாவது விவாகரத்து செய்யப்படுகிறாள்.

தலாக் சொல்லுவதற்கு முன், ஒரு பெண் மூன்று கடமைகளில் சரியாக இருக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அதாவது,

1. மாதவிடாய், பிரசவ இரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நீங்கி மனைவி தூய்மையாக இருக்க வேண்டும்.

 2. மனைவியுடன் தலாக் சொன்னபிறகு உடலுறவுக் கொள்ளக்கூடாது.

 3. இரு சாட்சிகள் முன்னிலையில் மணவிலக்கு அளிக்க வேண்டும்.

இதுபோல் தலாக் சொல்லுவது இஸ்லாமியர்களிடையே அதிகமாக நிகழ்வதால், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று ஏற்கனபே பலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஷ்ரத் ஜகான் என்ற பெண் தாக்கல் செய்துள்ள மனுவில்,

நீதிபதிகள், அனில் தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணைக்கு ஏற்றது.

மனுவில் இஷ்ரத் ஜகான் கூறியுள்ளதாவது:

என் கணவர், தொலைபேசியில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்து விட்டார். ஏழு முதல், 12 வயதுள்ள என் மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை, தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்து உள்ளார். முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் இந்த விவாகரத்து முறையால், என்னைப் போல, நாடு முழுவதும் பல பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டப் பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

தனிநபர் சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க வேண்டும். என் கணவர் தொலை பேசியில் மூன்று முறை தலாக் என்று கூறி பெற்ற விவாகரத்து செல்லாது என்று அறிவிப்பதுடன், எனக்கும், என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஷரியத் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை அடுத்தே சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்குகளை விசாரணை செய்து, இதுகுறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்துக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்துள்ளது.

இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவற்றுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

 

கார்ட்டூன் கேலரி