குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் இஸ்லாமியர் நடத்திய பிரமாண்ட பேரணி….

சென்னை:

த்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம் அமைதியாக முடிவடைந்தது.

சிஏஏ சட்டத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம் வன்முறைக்களமாக மாறியது.  அதைத்தொடர்ந்து கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.

இதைத்தொடர்ந்து,  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தன. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம்,இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு தடை விதித்ததுடன,  மார்ச் 11-ஆம் தேதி வரை தடை விதிப்பதாக தெரிவித்தது.

ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என அறிவித்த இஸ்லாமிய அமைப்புகள் இன்று காலை கலைவாணர் அரங்கு அருகே  கூடினர். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது, அதிரடிப்படை போலீசார் உள்பட ஏராளமான காவல்துறையினர் தலைமைச் செயலகம் வளாகம் உள்பட சென்னை கடற்கரை பகுதிகள் முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர்.  சேப்பாக்கம் பகுதியில் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டதுடன், 100 சிசிடிவி கேமராக்கள் மூலமும், 5 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலமும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தும் போலீசார் கண்காணித்தனர். காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் நேரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.  இதனால் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னை  கலைவாணர் அரங்கில் இருந்து இஸ்லாமிய அமைப்புகளின் முற்றுகை பேரணி தொடங்கி சேப்பாக்கம் வரை நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, பேரணி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பேரணிக்கு  வந்தவர்கள், அமைதியுடன் திரும்பிச் சென்றனர். இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்தனர்.