இஸ்ரேல் பிரதமர் மனைவி மீது நடைபெறும் லஞ்ச வழக்கு விசாரணை

ஜெருசலேம்

ஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாரா மீது இன்று லஞ்ச வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நேதன்யாகு.  இவர் மனைவி சாரா.  நேதன்யாகு நான்கு முறை பிரதமராக பதவி வகித்தவர்.   வரும் வருடம் நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் பிரதமர் வேட்பாளராக போட்டியிட உள்ளவர்.  இவர் மீது ஏற்கனவே பல ஊழல் புகார்கள் உள்ளன.   ஆயினும் இவர் இன்னும் பிடிவாதமாக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

சமீபத்தில் இவர்  இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான பேசெக் என்னும் நிறுவனத்துக்கு நிறைய சலுகைகள் வழங்கி உள்ளார்.   இந்த சலுகைகளைப் பெற அந்த நிறுவனம் சாராவுக்கு லஞ்சமாக நிறைய பணம் கொடுத்துள்ளதாக இஸ்ரேல் காவல்துறை குற்றம் சாட்டி உள்ளது.   நேற்று முதல் இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று அரசு வழக்கறிஞர் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு பங்கு உள்ளதாக தெரிவித்தார்.  அவர்களில் பிரதமர் மகன் யாயிர் நேதன்யாகு மற்றும் யாயிர் மனைவி ஆகியோரும் அடங்குவர்.   இதை சாராவின் தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார்.   காவல்துறையினர் தேவையில்லாமல் இது  போன்ற பொய் தகவல்களை தெரிவிப்பதாக அவர் கூறினார்.

இது குறித்து பிரதமர் நேதன்யாகு, “எனது வளர்ப்பு நாய் கைரா கடந்த பிப்ரவரி மாதம் இறந்து விட்டது.   அது உயிருடன் இருந்தால் அந்த நாயையும் லஞ்ச வழக்கில் விசாரணை செய்திருப்பார்கள்.  காவல்துறை நடவடிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு.  அதை அவர்கள் உணர வேண்டும்” என கூறி உள்ளார்.