ஜெருசலேம்: இஸ்ரேலில் தேசிய ஒற்றுமை அரசை ஏற்படுத்த, பிரதமர் பெஞ்சமின் நேதன்யகுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு அதிபர் ரூபன் ரிவ்லின்.
இதுதொடர்பாக ரிவ்லின் கூறுகையில், “நாம் இந்தச் சூழலில் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை சமாளித்து இஸ்ரேலில் புதிய அரசு அமையும் என நம்புகிறேன். எனவேதான், தேசிய ஒற்றுமைக்காக பிரதமர் நேதன்யகுவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்ரேலில் தேர்தல் நடந்தது.
ஆயினும் ஆட்சி அமைவதற்கான பெரும்பான்மை யாருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து, செப்டம்பரில் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து (கூட்டணி) தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முறை மேற்கொள்ளப்பட்டது.
ஆயினும், அந்த அரசில், தான் பிரதமராக இருக்க வேண்டும் என நேதன்யகுவும், முக்கிய எதிர்கட்சியான புளு அண்ட் ஒயிட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் காண்ட்ஸூம் பிடிவாதமாக இருந்தனர். இதனால் இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் 3வது முறையும் தேர்தல் நடந்தது. அதிலும்கூட யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தேசிய ஒற்றுமை அரசு அமைய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மசோதா மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆதரவாக 71 பேரும், எதிராக 37 பேரும் வாக்களித்தனர். அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கு பிரதமர் பெஞ்சமின் நேதன்யகுவிற்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.