ஜெருசலேம்: பிரபல வங்கக் கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான ரவீந்திரநாத் தாகூரை கெளரவிக்கும் வகையில், இஸ்ரேலின் தெரு ஒன்றுக்கு, அவரின் பெயரை சூட்டியுள்ளது அந்நாட்டு அரசு.
தாகூரின் 159வது பிறந்த நாளையொட்டி, இந்தப் பெயர் சூட்டு வைபவம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரேல்-இந்தியா என்ற அதிகாரப்பூர்வ அரசு டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; வங்கத்து கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், மனித குலத்திற்கு ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை போற்றிடவும், அவரது 159வது பிறந்த நாளையொட்டி அவருக்கு கெளரவம் சேர்க்கும் வகையிலும் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு தாகூர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரம், கடந்த 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் தலைநகராக செயல்பட்டு வந்தது. பின்னர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், யூதர்களின் நீண்டகால கனவான ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகராக மாற்றப்பட்டது.