இளம் விஞ்ஞானிகளை உருவாக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

--

புதுடெல்லி:

இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான மையத்தை திருச்சியிலும், ஆராய்ச்சி மையத்தை கன்னியாகுமரியிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய இளைஞர்கள் அதி திறமைசாலிகள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது இஸ்ரோவின் பொறுப்பு. இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து தலா 3 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு ஒரு மாத காலம் இஸ்ரோவில் பயிற்சி தரப்படும்.

பெரும்பாலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவில் விளக்கவுரை நிகழ்த்தப்படும்.

மூத்த விஞ்ஞானிகளுடன் கருத்துகளைப் பறிமாறிக் கொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பு தரப்படும்.
சிறிய அளவிலான சாட்டிலைட்டை உருவாக்குவதற்கான பயிற்சி தரப்படும்.

அந்த சாட்டிலைட்கள் தகுதியானதாக இருந்தால், அவர்கள் மூலமே பறக்கவிடப்படும். மாணவர்கள் சொந்தமாக சாட்டிலைட்டை விண்ணில் செலுத்த விரும்பினால், அதற்கான செலவை இஸ்ரோ ஏற்கும்.

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் மையத்தை தொடங்கவுள்ளோம். தமிழகத்தில் திருச்சியில் இந்த மையம் அமைக்கப்படும்.

மேலும் விண்வெளி விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சி குறித்து திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். இத்தகைய மையம் தமிழகத்தில் கன்னியாகுமரியில் அமைக்கப்படும் என்றார்.

இஸ்ரோ தலைவர் சிவனின் சொந்த ஊர் கன்னியாகுமரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may have missed