பெங்களூரு: மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ், இஸ்ரோவிற்காக, துருவ செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான 5 ராக்கெட்டுகளை கட்டமைப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உறுதிசெய்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன், இதுதொடர்பாக ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து விருப்ப மனுக்களைக் கேட்டுள்ளோம். இத்திட்டத்தில் நிச்சயமாக எந்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. இஸ்ரோவின் இந்த திட்டம் மத்திய அரசின் மேக்-இன்-இந்தியா முன்னெடுப்பை ஊக்குவிப்பதாக அமையும்” என்று தெரிவித்தார்.

இஸ்ரோவின் 50 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் புதிய முன்னெடுப்பு ஒரு மைல் கல் என்று வர்ணிக்கப்படுகிறது. விக்ரம் சாராபாய் வானியல் மையத்தின் சார்பாக வரும் தகவல்களின்படி, ஒரு முழுமையான பிஎஸ்எல்வி ஏவு விண்கலத்திற்கான செலவு ரூ.200 கோடி.

இந்தவகையில், மொத்தம் 5 பிஎஸ்எல்வி ஏவு விண்கலத்தை கட்டமைக்க குறைந்தபட்சம் ரூ.1000 கோடிகள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த செலவினக் கணக்குகள் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.