புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன், கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக் கோள்களை செலுத்தியதன் மூலம் ரூ.6289 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்திற்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பேசுகையில் கூறியதாவது, “கடந்த மார்ச் 6ம் தேதி, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(என்எஸ்ஐஎல்) என்ற அமைப்பை, விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் வகையில் இந்திய அரசு அமைத்துள்ளது.

இந்த அமைப்பானது, வணிக ரீதியாக செயல்படக்கூடியதாகும். வளர்ந்து வரும் உலகளாவிய விண்வெளிச் சந்தையை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாகும்.

கடந்த 3 ஆண்டுகளில் 239 செயற்கைக் கோள்களை வணிக ரீதியாக செலுத்தி, அதன்மூலம் ரூ.6289.05 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது ஆன்ட்ரிக்ஸ் கார்பரேஷன் லிமிடெட்” என்றார்.