டில்லி

விக்ரம் லாண்டர் தொடர்பு இன்னும் கிடைக்காத நிலையில் சந்திரயான் 2 விண்கல ஆயுளை 7 வருடங்களாக இஸ்ரோ அதிகரித்துள்ளது.

இந்தியாவின் நீண்ட நாள் கனவுத் திட்டமான சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.   இதன் ஆர்பிட்டர் தற்போது நிலவைச் சுற்றி  வருகின்றது.   ஆர்பிரேட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் பகுதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்க இருந்த நிலையில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.   தொடர்பை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

விக்ரம் லாண்டரின் ஆயுட்காலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே என்பதால் அதற்குள் தொடர்பை மீண்டும் பெற விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.   அது இயலாமல் போனால் அடுத்த கட்ட ஆய்வு நடவடிக்கைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர்.    சந்திரயான் 2  விண்கலத்தின் முக்கிய  பகுதியான ஆர்பிட்டரில் தற்போது 500 கிலோ எரிபொருள் உள்ளது.

இந்த எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் ஆர்பிட்டர் இன்னும் 7 வருடங்கள் வரை இயங்க வாய்ப்புள்ளது.    எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் அதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர்.   தற்போது ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி சென்றுக் கொண்டிருக்கும் சுற்றுப்பாதையை மாற்றினால் மட்டுமே அதிக எரிபொருள் செலவாகி ஆர்பிரேட்டரின் ஆயுட்காலம் பாதிப்பு அடையும்.,

எனவே தற்போதுள்ள சுற்றுப்பாதையை மாற்றாமல் நிலவில் உள்ள மேற்பகுதியில் மேக்னீசியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், டைட்டானியம். இரும்பு மற்றும் சோடியம் ஆகிய   பொருட்கள் உள்ளதைக் குறித்தும் அவை எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் குறித்தும் ஆர்பிட்டர் ஆய்வு செய்ய உள்ளது.   அத்துடன் முக்கிய ஆய்வாக நிலவின் தென் துருவத்தில் உள்ள உறைந்த நீரில் அளவை சந்திரயான் 2 ஆர்பிட்டர் ஆய்வு செய்ய உள்ளது.