தொடரும் இஸ்ரோவின் சாதனை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 43 ராக்கெட்!

ஸ்ரீரீஹரிகோட்டா:

‘புவி கண்காணிப்பு செயற்கைகோளை எடுத்துக்கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்  இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’  ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைகோள்களை வெற்றிகரமான விண்ணில் செலுத்தி உள்ள நிலையில், தற்போது  புவி ஆய்விற்கான, அதிநவீன, ‘ஹைசிஸ்’ என்ற செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி., – சி 43 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தியது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்  இன்று காலை, 9:58 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில், . ஹைசிஸ் செயற்கைக்கோளுடன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 8 வெளிநாடுகளைச் சேர்ந்த, 30, ‘நானோ’ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இவற்றில் 23 செயற்கைகோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை ஆகும். மொத்தம், 380 கிலோ எடை உடைய, ஹைசிஸ் செயற்கைக் கோள், வேளாண்மை, வனம், கடலோர பகுதி, நீர் நிலைகள், மண்வளம் உள்ளிட்ட, புவி ஆய்விற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்ட இந்த செயற்கைகோள் சூரிய சுற்றுவட்ட பாதையில் பூமியில் இருந்து 504 கிலோ மீட்டர் உயரத்தில் 97.468 டிகிரி யிலும், ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் 636 கிலோ மீட்டர் உயரத்தில் 97.957 டிகிரி புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த செயற்கை கோள் வாயிலாக  தகவல் தொடர்பு, கடல்வழி, பாதுகாப்புகள் கண்காணிக்கப்படும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டில் 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் ஏவி, இஸ்ரோ உலக சாதனை படைத்தது. மேலும்    கடந்த 14ந்தேதி இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3/டி2 ராக்கெட்  ‘ஜிசாட்-29’ செயற்கைகோளை  மூலம் விண்ணில் ஏவி வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.