ஸ்ரீஹரிகோட்டா:

ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சுற்றி வரும் நிலையில், இன்று 3வது முறையாக அதன் சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டு  உள்ளது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,  கடந்த ஜூலை 22ம் தேதி (2019) சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில்,  கடந்த  ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம் ஆகஸ்டு 20ந்தேதி முதல்,  நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.  அதன்பின் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2 முறை அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப் பட்ட நிலையில், இன்று 3வது முறையாக இன்று காலை 09.04 அதன் சுற்று வட்டப்பாதை மாற்றப்பட்டு  இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

விண்கலத்தின் அனைத்து கருவிகளும் வெற்றிகரமாக செயல்படுவதாக கூறியுள்ள இஸ்ரோ,  அடுத்த நிலவின  எல்லைக்குட்பட்ட சுற்றுப்பாதை உயர்த்தப்படும் நிகழ்வு ஆகஸ்ட் 30, 2019 அன்று 1800 – 1900 மணிக்கு  இடையில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இறுதியாக செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ  தெரிவித்துள்ளது. சந்திரயான் நிலவில் கால் வைக்க இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன.