ரியோ டி ஜெனீரோ:

பிரேசில் நாட்டி’ன் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்  அபிஷேக் வர்மா வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில்,  தமிழக வீராங்கனை இளவேனில்தங்கம் வென்ற நிலையில், இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்ற வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து  72 நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டி கடந்த 26ஆம் (ஆகஸ்டு) தேதி தொடங்கிய நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

துருக்கியை சேர்ந்த இஸ்மாயில் கெலஸ் 243.1 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 இதன் மூலம் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியா  2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன்  முதல் இடத்தில் உள்ளது.