பீஜிங் :

சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட, தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.  இறுதி சுற்று போட்டிகள் சீனாவின் புதியான் நகரில் நடைபெற்று வருகின்றன.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் 0.1 புள்ளிகளில்  தங்கம் வென்றுள்ளார். இவர் 250.8 புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதுபோல மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 17 வயதான மனு பாக்கர் தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி 244.7 புள்ளிகளை பெற்ற அவர், இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மனு பாக்கர், ஹீனா சித்துவுக்கு பிறகு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் 2வது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக  நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இளவேனில் வளரிவான் கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.