ஆன்லைன் வகுப்புக்கள் : கிளம்பும் சர்ச்சைகள்

ஆன்லைன் வகுப்புக்கள் : கிளம்பும் சர்ச்சைகள்

பத்தாம் வகுப்புத் தேர்வு பிரச்சினைக்கு முடிவுகட்டி சில தினங்கள் கூட ஆகவில்லை. அடுத்த பிரச்சினையாக முளைத்து நிற்கிறது ஆன்லைன் வகுப்புகள் குறித்த சர்ச்சைகள்.

தனியார்ப் பள்ளிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்திவரும் இந்தச் சூழலில், ‘வசதியுள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியும்… இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது. உண்மையில் ஆன்லைன் கல்வி ஆரோக்கியமானதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தனியார்ப் பள்ளி ஒன்றின் நிர்வாகியான ராமசுப்பிரமணியன், “ஊரடங்கு முழுமையாக முடிந்து இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் அவசியமாகின்றன. மாணவர்களுக்குக் கல்வியுடனான தொடர்புகள் அற்றுப்போய் விடக் கூடாது; ஆரம்ப வகுப்புகளில் கற்ற அடிப்படைக் கல்வி மறந்துபோய்விடக் கூடாது. எனவே, பெரும்பாலான பெற்றோர்களே, ‘ஆன்லைன் வகுப்புகளை நடத்துங்கள்’ என்று எங்களிடம் கேட்கிறார்கள்.

தினமும் ஒரு மணி நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஊரடங்கால் தனித்திருக்கும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல் சீராக இருக்கும்.  நாம் தான் இதை பகுத்தாய்ந்து முறைப்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக, `ஆன்லைன் வகுப்புகளே வேண்டாம்’ என்பது சரியல்ல” என்று ஆன்லைன் வகுப்புகளின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

ஆனால் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி  பேசுகிறார் இன்னொரு ஆசிரியர். “பள்ளி என்கிற அமைப்புதான் குழந்தைகளின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை உள்ளிட்ட பாகுபாடு களை உடைக்கும் இடமாக அமைகிறது. அந்த வகையில் ஆன்லைன் கல்வி, மாணவர்களிடம் இயலாமை உணர்வை உண்டாக்குகிறது. தனியார்ப் பள்ளிகள் மும்முரமாக ஆன்லைன் வகுப்புகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. மற்றொருபுறம் இதைப் பார்த்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் மன அழுத்தம் அடைகின்றனர்.

இது கொரோனா ஊரடங்கு காலம்தான். கல்வியை நீண்டகாலம் தள்ளிப்போட முடியாதுதான். இப்படியான சூழலில் ஆபத்தான மற்றும் மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய முடியாத, கல்விக்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய போன் அல்லது டேப்லெட்டை அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கூடவே, இலவச இணைய வசதி செய்து கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஆசிரியர்களை ஆன்லைன் வகுப்பெடுக்கச் சொல்லலாம்.

எல்லோருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்வரை ஆன்லைன் கல்வியை அரசு தடை செய்ய வேண்டும். இப்போதைக்குக் கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்து பேசி உடனடியாகக் கல்விக்காக பிரத்யேக டி.வி சேனலைத் தொடங்க வேண்டும். அது கேபிள் மூலம் அனைவரையும் சென்றடைய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கேரளாவில் செய்வதுபோல் லோக்கல் கேபிள் சேனல்களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யலாம்” என்று ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட வேண்டிய விதம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

எவ்வளவு நேரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது என்கிற வரையறை வேண்டும்.  ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.  கல்வி என்பது ஆசிரியர்-மாணவர் இடையிலான உரையாடல், அதைத் தொடர்ந்த விவாதவழித் தேடல்களில்தான் முழுமை பெறுகிறது. அந்த வகையில் ஆன்லைன் கல்வி ஒருவழிப்பாதை மட்டுமே. அது மாதக்கணக்கில் தொடர்ந்தால் பிள்ளைகள் எலெக்ட்ரானிக் சாதனங்களுடன் மட்டுமே பழகி எந்திரங்களாகி விடுவார்கள். குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் விலகி நிற்பார்கள்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறை, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. தனியார் பள்ளிகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்திவரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களும் வீட்டிலிருந்தே படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இணைய முகவரி: e-learn.tnschools.gov.in

தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்துவரும் மாணவர்கள், வகுப்பறை என்ற சூழலை இழப்பதால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்பதால் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு இவ்வாறான சூழ்நிலை அமையவில்லை என்ற மன உளைச்சலுக்கும் தள்ளப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

– லெட்சுமி பிரியா