சென்னை: கூட்டணி கட்சிகள் அதிமுக தொகுதிகளை கேட்கக்கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில்,  அதிமுக வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று ஒரே நாளில் நேர்காணல் நடத்திய நிலையில், இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  இன்றைய மாவட்டச்செயலாளர்களுடன் நடத்திவரும் ஆலோசனையைத் தொடர்ந்து, முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் பட்டியல், தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி கட்சிகளின் கேட்கும் தொகுதி உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, அதிமுக  மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூத்த நிர்வாகிகள்,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ந்து,  மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து,  தேர்தலில் போட்டியிடும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட உள்ளதாக வரும் தகவல்கள் கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பட்டியலில்,  அதிமுக நேரடியாக போட்டியிட கூடியவை தொகுதிகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.  இந்த பட்டியலில் வெளியாகும் தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்கக்கூடாது என்பதை நாசூக்காக  தெரிவிக்கும் வகையில், இன்று வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட இருப்பதாக அதிமுகவினரிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.