கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் முதல்கட்ட வெற்றி… சுதா சேஷய்யன் பெருமிதம்…

சென்னை:
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் முதற்கட்ட வெற்றி அடைந்துள்ளதாக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்து உள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் சுமார் 600 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள  எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும் தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், புஷ்கலா, தம்மண்ணா ஆகியோர் அடங்கிய குழுவினர், கொரோனா வைரஸை தடுக்கும் புரதத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக கொரோனா  வைரசுக்கு தடுப்புமருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆய்வு குறித்து சுதா சேஷய்யன் கூறியதாவது,
Sars Cov 2 வை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் உலகளாவிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.  எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திலும் அது தொடர்பான ஆய்வுகள் கடந்த 3 வாரமாக  நடைபெற்று வந்தன.
எங்களுடைய நுண்ணுயிரியல் துறை மற்றும் நோய் எதிர்ப்புவியல் துறை. நோய் பரவுவியல் துறை சார்பில் இந்த ஆய்வுகள் நடைபெற்று வந்தது. இதில் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது.
வைரஸ் தடுப்பு கண்டுபிடிக்கும் ஆய்வுகளின்போது முன்பெல்லாம்,  வைரஸை ஆய்வகத்தில் வளர வைத்து வைரஸ் கல்ஷர் போட்டு, அதற்கு பின்பே,  அதற்குரிய  மருந்துகளை போட்டு சோதனை நடத்த முடியும். இது ஆபத்துகளும் அபாயங்களும் நிறைந்த பணியாகவும், வெகு காலமும் எடுக்கும்.
ஆனால், தற்போதைய ரிவர்ஸ் வேக்சினாலஜி  எனப்படும் லேட்டட்ஸ் தொழில்நுட்பம் காரணமாக, வைரஸ் தடுப்புக்கான மருத்துக்காக பயோ இன்பர்மேட்டிக்ஸை வைத்துதான் ரிவர்ஸ் வேக்சினாலஜி என்ற முறையை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த முறையிலான சோதனைக்கு   வைரஸ் தேவையில்லை. வைரஸின் மரபணு தொடரை வைத்து,  கணினி பல பர்முடேஷன் காமுடேஷன் போட்டு பார்த்து ரிவர்ஸ் வேக்சினாலஜியில் முதற்கட்டமாக எந்த தடுப்பு மருந்து வேலை செய்யும் என்பதை கண்டுபிடிக்கலாம்.
இந்த முறையை கையாண்டு, நோய் எதிர்ப்புவியல் துறையின் தலைவர் டாக்டர் புஷ்கலா, நோய் பரவுவியல் துறையின் தலைவர் டாக்டர் சீனிவாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி எங்களுடயை ஆராய்ச்சி மாணவர் டாக்டர் தமன்ன பஜந்திரி, நான் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஒரு வேக்சின் கேன்டிட்டேட்டை கண்டுபிடித்துள்ளோம்.
கொரோனா வைரஸை தடுக்கக் கூடிய synthetic polypeptide-ஐ உருவாக்கியிருக்கோம். இந்த பாலிபெப்டைக்கு நாங்கள் இன்னும் பெயர் வைக்கவில்லை. இது முதல் கட்டம்தான். இந்த முதல்கட்டத்தை தாண்டி இன்னும் பல படிகள் இருக்கின்றன. அந்த படிகளுக்காக ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக அமெரிக்காவில் இருக்கக் கூடிய தடுப்பு மருந்து நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த முதல்கட்டத்தில் எங்களுக்கு 70 சதவீதம் சரியான வேக்சின் கேண்டிடேட் கிடைத்துள்ளது. இதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து கொண்டு போய் அந்த நடவடிக்கைகள் முடிந்தால்தான் ஒரு தடுப்பு மருந்து கொண்டுவர முடியும்.
இந்த  ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில், கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது.
இந்த மருந்து ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.