ஒரே மேடையில் முதல் முறையாக அம்மா-அண்ணனுடன் பிரியங்கா….

குஜராத் மாநில மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.அந்த மாநிலம் காந்தியை தந்த மாநிலம் என்பதாலா? அதுவும் இருக்கலாம்.

மூன்று காந்திகளை ‘அரசியல் வாதிகளாக’ ஒரே மேடையில்  முதன் முதலாக காணும் பாக்கியம் பெற்றவர்கள் என்பதாலும் இருக்கலாம்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நாளை மறுநாள் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சோனியா,ராகுல் ஆகியோருடன் பிரியங்காவும் பங்கேற்கிறார்.கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின் அம்மா-அண்ணனுடன் பிரியங்கா பேசும் முதல் கூட்டம் இது.

முன்னதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமும் அங்கு நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு  குஜராத்தில் நடைபெற்றது.அதன் பிறகு இப்போது தான் நடக்கிறது.

பிரதமர் மோடியின் ஊரில் நடைபெறும் இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

காலையில் அங்கு வரும் காந்தி குடும்பத்தார், மஹாத்மா காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்துக்கு சென்று வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

காந்திநகர் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

-பாப்பாங்குளம் பாரதி

கார்ட்டூன் கேலரி