நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை ரெய்டு…..

சென்னை:

பிகில் படத்தின் வசூல் தொடர்பாக நடிகர் விஜய்-ஐ வருமான வரித்துறை கடந்த மாதம் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் அவரது பனையூர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 15ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அவரிடம் வருமான வரித்துறை மீண்டும் மீண்டும் விசாரணை நடத்துவது தமிழக திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் பெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவிததது. இது தொடர்பாக கடந்த மாதம் நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது மாஸ்டர் படப்பில் நெய்வேலியில் இருந்த விஜயை அழைத்து வந்த வருமான வரித்துறையினர் சுமார்  23 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படடது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.  விஜயின் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

3 வாகனங்களில் வந்த 8க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  , மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், விஜய் வீட்டில் இன்று நடைபெற்றது ரெய்டு அல்ல என்றும், ஏற்கனவே கடந்த மாதம் நடந்த சோதனையின்போது சில அறை, மற்றும் டிராயர்கள், லாக்கர்கள் வருமான வரித்துறையினரால் சீல் வைக்கப்பட்டது. அந்த சீல்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாக  வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.