அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்! அமைச்சர்கள் அதிர்ச்சி

--

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பி வருவதும், விசாரணை செய்வதும் அமைச்சரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது  பணப்பட்டுவாடா நடைபெற்றதாக வந்த தகவல்களை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்ற ஆவனங்கள் குறித்து விசாரணை செய்ய வருமான வரித்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதே நேரத்தில் எம்எல்ஏக்கள் விடுதியில் நடைபெற்ற சோதனையில் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் ரெய்டு நடைபெற்ற அதேநோளில்,  புதுக்கோட்டையில் உள்ள அமைச்சரின் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து, அமைச்சர்விஜயபாஸ்கரை நேரில் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஜயபாஸ்கரின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்றது.

கல்குவாரி முறைகேடுகல்குவாரி முறைகேடு குறித்து விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பியை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர்.

கல்குவாரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டியது இருப்பதாக இன்று (21ந்தேதி) விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று விசாரணைக்கு ஆஜராவாரா என்று எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

நேற்று முதல்வருக்கு நெருக்கமான நெடுஞ்சாலைதுறை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீடுகளில் ரெய்டு நடைபெற்ற நிலையில், இன்று அமைச்சரை விசாரணைக்கு அழைத்திருப்பது மேலும் கிலியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.