இணைப்பு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை!: எடப்பாடி அதிரடி பேச்சு

--

அதிமுக-வின் இரு அணிகளும் இணையாவிட்டால் பரவாயில்லை  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு அதிமுக அம்மா மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா என இரு அணிகளாக செயல்படுகின்றன. இந்த நிலையில்,  ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், சசிகலா மற்றும் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இதன் பிறகு  பேச்சுவார்த்தை நடத்தத் தயார்’ என்று ஓ.பி.எஸ். அணியினர் தெரிவித்தனர். இக் கோரிக்கைகளை ஏற்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து  இரு அணிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இரு அணித் தலைவர்களும் பேச்சுவார்த்தைக் குறித்து  வெவ்வேறுவிதமான  தகவல்களை  தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக அம்மா அணி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கு பன்னீர்செல்வம் அணியினர் தடை ஏற்படுத்துகிறார்கள். . இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களையும் அதிமுக அம்மா அணியே கைப்பற்றும். ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்று எதிர்க்கட்சி (திமுக) போடும் திட்டம்  கானல் நீராகிவிடும். தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று  பேசியிருக்கிறார்.