” எனது கையிலேயே நிகழ்ந்த கொடூரம் “ – தந்தையின் மரணம் குறித்த நினைவுகளை பகிர்ந்த கோலி

--

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தந்தையின் மரணம் குறித்த சோகமான தகவலை வெளியிட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார்.

virat

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார். தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட இவரின் புகழ் உலகுக்கே தெரியும், ஆனால், பலருக்கு தெரியாத சோகம் இவருக்கும் உள்ளது. தன் மனதில் நிறைந்து கிடக்கும் சோகத்தை முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு விராட் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2006ல் நடந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் கோலி பங்கேற்ற போது, அவரின் தந்தை உயிரிழந்தார். ஆனால் தன் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு, அடுத்த நாளே கோலி தொடர்ந்து போட்டியில் பங்கேற்று, தனது அணியை தோல்வியில் இருந்து காத்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. தன் தந்தை இழப்பு குறித்து பெரும்பாலும் பேசுவதை தவிர்க்கும் கோலி, தற்போது தனது தந்தை குறித்த சோகமான தகவலை வெளியிட்டு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார்.

தனது தந்தையின் கடைசி நிமிடங்கள் குறித்து கோலி கூறுகையில், ” அதிகாலை 3 மணி இருக்கும், முதல் நாளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் அவுட்டாகாமல் இருந்தேன். நான்கு நாட்கள் போட்டி என்பதால் அடுத்த நாள் நான் மீண்டும் பேட்டிங் செய்ய செல்ல வேண்டும். ஆனால் என் தந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்தார். எங்களுக்கு தெரிந்த எல்லா டாக்டர்களிடமும் உதவி கேட்டோம், ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.

பின் ஆம்புலன்ஸ் வருவதற்குள் எனது கையிலேயே என் தந்தையின் மரணம் நிகழ்ந்து முடிந்து விட்டது….. அதற்கு பின் தான் அதிக கவனமாக செயல்பட துவங்கினேன். வேறு விஷயங்களை விட்டுவிட்டு, எனக்குள் உள்ள அனைத்து சக்திகளை வெளியே கொண்டு வந்து எனது தந்தை மற்றும் எனது கனவை நினைவாக்க வெறித்தனமாக பாடுபட்டு வருகிறேன் “ என்று உருக்கமாக கூறியுள்ளார்.

கோலியின் இந்த தகவல் அவரது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.