லண்டன்: பிரிட்டன் தலைநகரில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை ‘பெரிய சம்பவம்’ என்று அறிவித்துள்ளார் லண்டன் மாநகர மேயர் சாதிக் கான்.

அவர் கூறியுள்ளதாவது, “நகரின் சில பகுதிகளில், 20 பேருக்கு ஒருவர் என்ற வகையில் வைரஸ் தொற்று உள்ளது. லண்டன் நகரின் ஒட்டுமொத்த சராசரி என்று பார்த்தால், 30 பேருக்கு ஒருவர் என்ற வகையில் வைரஸ் தொற்று உள்ளது.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவையானது(எல்ஏஎஸ்), சராசரி பரப்பு நாட்களைவிட, ஒருநாளைக்கு கூடுதலாக 3000 முதல் 4000 அழைப்புகளை பெறுகிறது.

லண்டன் நகரின் நைட்டிங்கேல் மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கும். அதேசமயம், அது கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படாது.

லண்டன் முழுவதும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத வகையில் சென்று கொண்டுள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும். இந்த நிலை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிடும். எனவே, இதுவொரு ‘பெரிய சம்பவம்'” என்று அச்சம் தெரிவித்துள்ளார் மேயர் சாதிக் கான்.