கொரோனா பாதிப்பு – மிகப்பெரிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார் சீன அதிபர்!

பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது சீனாவின் “மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை” என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்.

இதுவரை, அந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,440 ஐ தாண்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 77,000 என்பதைத் தொட்டுள்ளது.

இந்த வைரஸ் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்த ஒரு சந்திப்பில் கலந்துகொண்டபோது இவ்வாறு தெரிவித்தார் சீன அதிபர்.

அவர் மேலும் கூறியதாவது, “இது நமக்கான ஒரு பேரிடர் மற்றும் பெரிய சோதனையும்கூட. இந்த கிருமித் தொற்று, சீனாவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தப் பாதிப்புகள் குறுகிய காலத்திற்கானவைதான். நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்றார்.
அந்த நோய் குணமானவர்கள் பலருக்கு, மீண்டும் அந்த வைரஸ் தொற்றின் அறிகுறி தெரியவந்துள்ளது மருத்துவ உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.