மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், முக்கிய வீரரான தோனியை வழக்கமான 5வது இடத்தில் இறக்காமல் 7வது இடத்தில் இறக்கியதானது ஒட்டுமொத்த அணியின் முடிவு என்று கூறியுள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய அணி 240 ரன்கள் என்ற சாதாரண இலக்கை சேஸிங் செய்யத் தொடங்கியபோது விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. 24 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகள் சரிந்துவிட்டன. இந்த இக்கட்டான நேரத்தில், விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் தோனியை 5வது இடத்தில் இறக்காமல், அடித்து ஆடும் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் பாண்ட்யாவை இறக்கியது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனவே, இதுகுறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளதாவது, “தோனியை 7வது இடத்தில் இறக்குவதென்பது அணியின் ஒட்டுமொத்த முடிவு. அணியில் அதை அனைவருமே அறிவர். ஏனெனில், விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், தோனியையும் அப்போது களமிறக்கி அவரும் ஆட்டமிழந்துவிட்டால், ‍சேஸிங் செய்வது யாரென்று கேள்வி எழும்.

எனவே, சிறந்த ஃபினிஷரான அவரை 7வது இடத்தில் இறக்கினால்தான் ஆட்டம் நம் பக்கம் திரும்பும் என்ற காரணத்தாலேயே அவர் 7ம் வரிசையில் இறக்கப்பட்டார். அவர் முன்னதாகவே களமிறங்கி அவுட்டாகியிருந்தாலும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கும்” என்றார்.