மத்தியஸ்தமெல்லாம் கிடையாது, அமைதி முயற்சிதான்: ஐக்கிய அமீரக தூதர்

புதுடெல்லி: சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முடி இளவரசர் ஷெய்க் முகமது பின் சையத் பின் சுல்தான் அல் – நஹ்யான் செயல்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், தனது நாட்டின் பட்டத்து இளவரசர், இரு நாடுகளுக்குமிடையே மத்தியஸ்தராக செயல்பட்டார் என்ற தகவலை மறுத்துள்ளார் இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அகமது அல் பன்னா.

அவர் கூறியுள்ளதாவது, “எங்கள் முடி இளவரசரின் நோக்கம் இரு நாடுகளுக்கிடையே நிலவிய பதற்றத்தை குறைப்பதாகத்தான் இருந்ததே ஒழிய, மத்தியஸ்தராக செயல்படுவதல்ல.

எங்கள் நாட்டினுடைய ராணுவத் துணை தலைவராகவும் உள்ள முடி இளவரசரிடமிருந்து, இரண்டு நாட்டு பிரதமர்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்தன.

அந்த அழைப்புகளின் நோக்கம், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்துவதுதானே ஒழிய வேறொன்றுமில்லை” என்றுள்ளார்.

– மதுரை மாயாண்டி