நியூயார்க்: முக்கியமானதாகவும், அதேசமயம் அச்சம் தரக்கூடியதாகவும் இருக்கிறது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் என்றுள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக்.

உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலால், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்துசெய்யப்பட்டது. அதேசமயம், அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஒத்திவைக்கப்பட்டு, ஆகஸ்ட் & செப்டம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், ரசிகர்கள் இல்லாமல் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடர் குறித்து உலக நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிக் கருத்து கூறியுள்ளார்.

அதில், “அமெரிக்க ஓபன் டென்னிஸ் என்பது முக்கியமானதுதான். அதேசமயம், அதிக அச்சம் தரக்கூடிய தொடரும் அதுதான். அதில் நான் பங்கேற்பேனா? என்பது குறித்து இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை.

ஆனால், அதில் பங்கேற்க வேண்டுமென்பதே எனது விருப்பம். ஏனெனில், தொடர் எப்படி நடத்தப்படுகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், சில மாற்றங்கள் நிகழலாம்” என்றார்.