விலகுதல் அல்ல; ஜஸ்ட் ஒதுங்குதல்தான்..!

சம்பந்தப்பட்டவர்களின் வாய்கள் வலிக்கும் வகையிலும், கேட்பவர்களின் காதுகளில் ரத்தம் வரும் வகையிலும், அரசியல் உலகில், தங்களின் ஓய்வை அறிவித்து, பின்னர் மீண்டும் மீண்டும் உள்ளே குதித்து உயிரை எடுத்தவர்கள் பலர்!

தமிழக அரசியல் களத்தில் சசிகலா எடுத்துள்ள முடிவு, பல்வேறுவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர், சசிகலாவின் அறிக்கையை ஆழ்ந்து படிக்காமல், அவர் அரசியலைவிட்டே சென்றுவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பாஜகவின் திருவிளையாடல் காரணமாக, இந்த சட்டமன்ற தேர்தல் நெருக்கடியில், சசிகலா ஒரு எதிர்பாராத முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது உண்மையே!

ஆனால், தனது அறிக்கையில் மிக கவனமாக, அரசியலிலிருந்து ‘ஒதுங்குதல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். ‘ஒதுங்குதல்’ என்பதற்கும், ‘விலகல்’ என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

எனவே, சசிகலாவின் முடிவு என்பது தற்காலிகம் என்ற முடிவிற்கே வரமுடிகிறது. இந்த தேர்தலில், மறைமுகமாக அவர் சில ஆட்டங்களை ஆடுவார் என்று கணிக்க முடிகிறது. இறுதியில், தேர்தலுக்குப் பிறகு, அவரின் நிலைப்பாட்டில் மாற்றம் வருவதற்கான வாய்ப்பே அதிகம்!