“இது எனது கடைசித் தேர்தல்” – அனுதாபம் தேடும் நிதிஷ் குமார்!

பாட்னா: இத்தேர்தல் எனது கடைசித் தேர்தல்… அனைத்தும் நன்றாக அமைகிறது… அனைத்தும் நன்றாகவே முடிகிறது என்று கூறி அனுதாபம் தேடியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில், மதேபுரா மாவட்டத்தில் உரையாற்றிய நிதிஷ்குமார் இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக பீகார் முதல்வராக பதவி வகித்துவரும் நிதிஷ்குமாருக்கு தற்போது 69 வயதாகிறது. அவர், நான்காவது முறையாக முதல்வர் பதவிக்கு தற்போது போட்டியிடுகிறார்.

தொடர்ந்து பதவியில் இருப்பதால், ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை அம்மாநிலத்தில் கடுமையாக இருக்கிறது.

“முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு நவம்பர் 10ம் தேதி வழியனுப்பு விழா நடப்பது உறுதி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் நமது தலைவர் தேஜஸ்வி யாதவ். எப்படியாயினும் இது அவரின் கடைசித் தேர்தல்” என்றுள்ளார் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிரித்யுன்ஜய் திவாரி.

அதேசமயம், நிதிஷ்குமாரின் இந்தப் பேச்சு குறித்து, அவரின் சொந்தக் கட்சி மற்றும் பாரதீய ஜனதாவிலிருந்து எந்த கருத்தும் இதுவரை வெளியாகவில்லை. நவம்பர் 10ம் தேதி பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.