கடந்த 2019ம் ஆண்டு சென்னை அணி, இறுதிப்போட்டி வரை முன்னேறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர்(தென்னாப்பிரிக்கா), இந்த 2020 ஐபிஎல் தொடரில், இதுவரை ஒரு போட்டியில்கூட ஆடுவதற்கான வாய்ப்பை பெறவில்லை.
கடந்தமுறை அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ‘ஊதா நிற தொப்பி’யை வென்றவர், இந்தமுறை கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை வேடிக்கைப் பார்க்கிறார். சில நேரங்களில், மைதானங்களில் ஆடும் சென்னை அணியின் வீரர்களுக்கு, பானங்களும் எடுத்துச் செல்கிறார். அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் செயல்பாட்டை வைத்து, இம்ரான் தாஹிருக்கு அணியில் வாய்ப்புத் தர வேண்டுமென்ற கூக்குரல்கள் ரசிகர்களிடமிருந்து எழுகின்றன. ஆனால், அமீரக ஆடுகளங்களின் சூழலைப் பொறுத்த அணியின் தேர்வு, தாஹிரின் உள்நுழைவுக்கு தடையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், தனது அணியினருக்காக, தான் பானங்கள் சுமந்து செல்வது தொடர்பான தனது உணர்வுகள் குறித்து சமூகவலைதள பதிவுகளுக்கு பதிலளித்துள்ளார் இம்ரான்.
“நான் மைதானத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது, என் அணியின் பல வீரர்கள் எனக்காக பானங்களை சுமந்துள்ளார்கள். அதனால், தற்போது தகுதியுள்ள வீரர்கள் மைதானத்திற்குள் இருக்கையில், அவர்களுக்காக திரும்ப செய்ய வேண்டியது எனது கடமை. நான் விளையாடுகிறேனா, இல்லையா என்பதல்ல பிரச்சினை; எனது அணியின் வெற்றிதான் எனக்கு முக்கியம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், முடிந்தளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதேசமயம், என்னைப் பொறுத்தவரை எனக்கு அணிதான் முக்கியம்” என்று டிவீட் செய்துள்ளார் இம்ரான்.