சென்னை: கூட்டுறவு வங்கிகளை  இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதில், எந்தவிதசட்டவிரோதமும்  இல்லை என்று  மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

”கூட்டுறவு வங்கி என்பதே முழுக்க முழுக்க விவசாயி களுக்காக உருவாக்கப்பட்டது. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என பலவிதமான வங்கிகள் வந்தபிறகும் கூட்டுறவு வங்கிகளுக்கு கிராமப்புறங்களில் தனி மரியாதை உண்டு.  விவசாயிகள் நேரடியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிக்கொள்ளலாம். பயிர்க் கடன், நகைக் கடன், தனிநபர் கடன், வீட்டு அடமானக் கடன், கல்விக் கடன் என அனைத்து வகையான கடன்களும் எளிதில் கிடைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் செயலாற்றி வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ப அதன் சேவைகளும் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.   அதாவது, இன்டர்நெட் பேங்கிங், மின்கட்டணம் செலுத்தும் வசதி, அனைத்து வகையான பில்களையும் ஆன்லைனில் செலுத்தும் வசதி, பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, எஸ்.எம்.எஸ். அலெர்ட் என பல வசதிகள் உள்ளன.

கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சேவையாற்றி வரும்  நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்தியஅரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், மத்தியஅரசின் சட்டத்துக்கு எதிராக,   எதிர்த்து காஞ்சிபுரம், பரமத்தி வேலூர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்பிஐ தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,    கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது. பணப் பரிவர்த்தனை, வங்கிநடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் நோக்கத்தில்  சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டே, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ்கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் மோசமான நிர்வாகம், நிதிநிலை காரணமாக நாடு முழுவதும்  430 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு விதமான சட்டங்கள் உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக வங்கிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் சட்ட ரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது சட்டவிரோதம் இல்லை என்பதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இதையடுத்து, வழக்கு  டிசம்பர் .4-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.