புதுடெல்லி:

போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல, போர் என்பதே தோல்வி தான் என்று கண்ணீர் மடல் எழுதியுள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர்.


ஸ்க்ரோல் இணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்…

நான் சமாதானத்தை விரும்புகிறேன். இந்தியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால், சமாதானம் என்ற வாரத்தையை பயன்படுத்துகின்றேன்.

என் கணவர் புனீத்தை திருமணம் செய்ததில் இருந்து 13 ஆண்டுகள் அவரோடு ராணுவ வாழ்க்கையை வாழ்ந்துருக்கின்றேன்.

ராணுவ வீரரின் மனைவியான புதிதில், போர் வெற்றி கொண்டாடப்படுவதை மற்ற பெண்களைப் போல் நானும் ரசித்திருக்கின்றேன். ஆனால் இன்று நானே சமாதானத்தை விரும்பும் அளவுக்கு திசைமாறியிருக்கிறேன்.

இதன் மூலம் போரின் கடுமையை உணர்ந்திருக்கின்றேன். அதன் வன்முறையை அறிந்திருக்கின்றேன். நாம் வாழும் இந்த உலகில் போர் எவ்வளவு பயங்கரமானதாக இருக்கிறது.

சிரியா, ஏமனில் குண்டு வீசப்பட்ட படங்களை பத்திரிகைகள் வெளியிட்ட போது இந்த நினைவுதான் மேலோங்கியது.

போரால் ஏற்பட்ட பாதிப்பையும், என்னையும் உங்களையும் போன்ற மக்களையும் எவ்வாறு பாதித்தது என்பதையும் நினைத்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயிருக்கிறேன்.

என் கணவர் போரிடுவதற்காகவே பயிற்சி பெற்றவர். இது போன்ற போர் சூழலை எதிர் கொள்ளும்போது, என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைத்திருக்கிறேன்.

நான் போருக்கு எதிரானவளாக இருந்தாலும், போரிடுவதற்காகவே இருக்கும் ஒருவரையல்லவா திருமணம் செய்திருக்கின்றேன்.

அதிர்ஷ்டவசமாக கடந்த 13 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு நிலையை நான் எதிர்கொள்ளவில்லை. சமாதானம் என்ற என் தார்மீகத்துக்கு சோதனை வரவில்லை.

நான் ராணுவத்துக்கு எதிரானவள் அல்ல. போருக்கு மட்டுமே எதிரானவள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஏனென்றால், நாட்டின் உரிமையை, ஆற்றலை, எல்லையை பாதுகாக்க வேண்டிய கடமை நம் ராணுவத்துக்கு உள்ளது.

சட்டம்ஒழுங்கு சீர்குலையும் போது அமைதியை ஏற்படுத்தவும், மனித நேய பணிகளில் ஈடுபடவும் ராணுவம் பயன்படுகிறது.

கடந்த மாதம்தான் என் கணவர் ஓய்வு பெற்றார். இதுவரை அவர் பதவி உயர்வை பற்றி பேசியதில்லை. எப்போதுமே கடமையுணர்வு பற்றியே பேசி கேட்டிருக்கின்றேன்.

கடந்த 1965-ம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் பலர் காயமுற்றனர். பலர் இறந்தனர்.

மூவர்ண கொடி போர்த்தி அந்த உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
இறந்த வீரரின் நினைவு அவரது குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.