ஜெ. இல்லம் நினைவில்லமாக மாற்றுவதற்கே ஆய்வு! ஆட்சியர் பேட்டி

சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று திடீரென சென்னை ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பரில் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய நிலையில், தற்போது மீண்டும் ரெய்டு நடப்பதாக வதந்திகள் பரவியது.

இந்நிலையில், ஜெ. இல்லத்தில் நடைபெற்று வரும் ஆய்வு குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறியதாவது,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போய்ஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகவே தற்போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஜெ.வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி சில அறைகளை சீல் வைத்திருப்பதால், தற்போது நினைவில்லமாக மாற்றும் வேலை நடைபெறுவதால், அவர்கள் முன்னிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

தங்களின் அழைப்பின்பேரிலேயே,  வருமான வரித் துறையின் கூடுதல் ஆணையாளர்  தலைமையிலான அதிகாரிகள் வந்துள்ளதாகவும், அவர்கள் முன்னிலையில்  மாநில வருவாய் துறை அலுவலர்கள் பணிகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மேலும், இந்த ஆய்வு இன்னும் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்றும்,  சாட்சியத்திற்காக மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர் என்றும் கூறினார்.

மறைந்தமுதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என கடந்த ஆகஸ்டு  மாதத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையில், வருமான வரித்துறையினர் கடந்த நவம்பர் மாதம் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் 187 வீடுகளில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.  அத்துடன், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நவம்பர் 17அன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜெயலலிதா பயன்படுத்தி வந்த இரண்டு அறைகள் சீல் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சாட்சிக்காகவே வருமான வரித்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி