“தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவல்ல” – சிஎஸ்கே நிர்வாகம் கூறுவதென்ன?

சென்னை: சிஎஸ்கே கேப்டன் எம்எஸ்.தோனிக்கு, இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன்.

தற்போது 40 வயதை தொட்டுள்ள தோனிக்கு, இந்த 2021 ஐபிஎல் தொடர்தான், கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகின. கடந்த தொடரில், ஒட்டுமொத்த சென்னையின் செயல்பாடு மோசமாக இருந்ததோடு, தோனியின் தனிப்பட்ட செயல்பாடும் சரியில்லை.

இந்நிலையில், அவருக்கு 2021 ஐபிஎல் தொடர்தான் இறுதியாக இருக்கும் என்று 2020ம் ஆண்டின் தகவல்கள் கூறின. ஆனால், அப்போது பேசிய தோனி, “இது தனது கடைசி ஐபிஎல் தொடர் அல்ல” என்றார்.

அதேபோல், இந்தாண்டின் ஐபிஎல் தொடரிலும் அவர் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், இந்த 2021 தொடர்தான் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் பேசியுள்ள சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன், “இது, தோனியின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்காது என்று நினைக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றும் நாங்கள் இப்போது அவரின் இடத்தை நிரப்புவதற்கு யாரையும் தேடவில்லை” என்றுள்ளார்.

எனவே, இத்தொடர் முடிந்த பிறகு, தோனியே இதுகுறித்து பேசினால்தான் உண்மை தெரியவரும்.