சென்னை: மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறத் துவங்கியதிலிருந்து, ஆளுங்கட்சியைவிட, எதிர்க்கட்சி அதிகளவில் வெற்றிபெறுவது இதுதான் முதல்முறை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் மூலமாக முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் ஆணையமே நடத்தியது.

ஆனால், அந்த தேர்தல்களில் எல்லாம் ஆளுங்கட்சியே பெரும்பான்மையாக வெற்றிபெறும். அதிகார பலம், பணப்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆளுங்கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.

ஆனால், இந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில்தான், ஆளுங்கட்சியின் அனைத்துவித அராஜகங்கள், முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மோசமான செயல்பாடு ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, எதிர்க்கட்சியான திமுக அதிகளவில் வெற்றிபெற்றுள்ளது.

சில மாவட்டங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களுக்கு, ஆளுங்கட்சியின் நன்மைக்காக ஊரகப் பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக, ஆளும் அதிமுகவை விட அதிக இடங்களில் வென்று சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.