உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை:
யிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பா.ஜ.க. அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி சப்ளை செய்வதில் அறிவியல்பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும் என்று சாடிய அவர், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு தாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உயிர் காக்கும் தடுப்பூசி போடுவதை “திருவிழா” என்று பெயர் சூட்டி தனது அரசின் நிர்வாக அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே பிரதமர் நரேந்திர மோடி அக்கறை காட்டுகிறாரே தவிர – அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்று முடிவு எடுக்க இதுவரை அவர் முன்வரவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்த பிறகும் கூட – அவர் இன்னும் பா.ஜ.க.விற்காக மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தில்தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைய தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் – அதற்கு மத்திய அரசும், அ.தி.மு.க. அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாதுகாப்புப் பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான். “தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” என்ற விழிப்புணர்வை உரிய காலத்தில் ஏற்படுத்தாமல் – தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை வைத்தே தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதம் காட்டுவது மிகவும் தவறான நடைமுறை. இது மாதிரி – தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி சப்ளை செய்வதில் அறிவியல்பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.