சென்னை:

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44% ஊதிய உயர்வை அரசு வழங்கியது சரியானதுதான் என்று மத்தியஸ்தராக உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம்  ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகையை உடனே அரசு வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

அப்போது, அரசு 2.57 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கியது. அதை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்ந்து.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், போராட்டத்தை கைவிட்டு, பணிக்குச் செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமனம் செய்தது.

அவர் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தமிழக அரசு, தொழிலாளர் நல வாரியம்,  போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அறிக்கை தயார் செய்தார்.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள  2.44% சம்பள உயர்வு சரியானது தான் என்று கூறப்பட்டுள்ளது.

அறிக்கையை  ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களின் 2.57% ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரித்ததுடன், அறிக்கையை அரசிதழில் வெளியிடவும் உத்தரவிட்டது.

மேலும், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்தது.