Random image

இந்திய வேகப்பந்து வீச்சு – கனவு நனவாகும் காலம் கனிந்துள்ளது..!

இந்திய கிரிக்கெட் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர். நீண்ட நெடுங்கால கிரிக்கெட் வரலாற்றைக் கொண்ட இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பொற்காலம் தற்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.

முன்பெல்லாம் இந்திய கிரிக்கெட்டில் சிறந்த மற்றும் பேட்ஸ்மென்களுக்கு அச்சம் தரும் வகையிலான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் சூழல்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் இருந்ததில்லை. அதற்கான குரல்களும் செவிமடுக்கப்பட்டதில்லை.

இந்திய பிட்சுகள் பொதுவாகவே ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே இருக்கும். இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் போட்டிகளில் ஸ்பின்னர்களை நம்பியே இந்திய அணி களமிறங்கும். தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் வெற்றி எப்போதும் சவாலாகவே இருந்துள்ளது.

கடந்த காலங்களில், வேகப்பந்து வீச்சில் கபில்தேவ் மட்டுமே இந்திய அணிக்கான பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகவும், அணிக்கு வெற்றிதேடி தரக்கூடியவராகவும் இருந்தார். அவரின் காலத்தில் அறியப்பட்ட மதன்லால் போன்றவர்களும், சற்று பின்னதாக வந்த மனோஜ் பிரபாகர், ஸ்ரீநாத் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் போன்றவர்களும் பெரிதாக சோபிக்கவில்லை.

இதனால், கபில்தேவிற்கு பிறகான காலங்களில், இந்திய வேகப்பந்து வீச்சு ரசிகர்கள், தங்களின் ஏக்கத்தை இந்திய அணியில் நிறைவுசெய்துகொள்ள முடியாத காரணத்தால், எல்லை தாண்டி எட்டிப்பார்க்கத் தொடங்கினர். வேறு எங்கே? பாகிஸ்தானைத்தான்.

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆகிப் ஜாவேத் மற்றும் ஷோயிப் அக்தர் போன்ற அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள் அந்நாட்டில் தொடர்ந்து உருவானார்கள். எதிரணியின் பேட்ஸ்மென்களை நடுங்க வைக்கும் திறன் அவர்களுக்கு இருந்தது. இந்தியாவின் பல பிரபல பேட்ஸ்மென்களின் கால்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த ஸ்டம்புகளை, பாகிஸ்தானியர்கள் வீசிய பந்துகள் அனாயசமாக பறந்துசென்று தாக்கி பல்டியடிக்க வைத்தன. சமயத்தில் முறிக்கவும் செய்தன.

ஆஸ்திரேலிய வேகங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உயர்ந்து நின்றனர் பாகிஸ்தானின் வேகங்கள். இந்தியாவோ அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே போதுமானதாக கருதியது.

திறமைவாய்ந்த பல வேகப்பந்து வீச்சாளர்கள் களம் கிடைக்காமல், வாய்ப்பும் கிடைக்காமல் சோர்ந்துபோய் ஒதுங்கிவிட்டனர் மற்றும் பலர் ஓரங்கட்டப்பட்டும் விட்டனர்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்நாடு எப்போதுமே பேட்ஸ்மென்களை பூஜிக்கும் நாடு. ஆனால், சவுரவ் கங்குலி என்ற ஒருவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, களமும் சூழலும் இந்திய அணியில் சற்று மாறத்தொடங்கியது.

அவருடைய ஆதரவின்கீழ், ஜாகீர் கான், நெஹ்ரா, ஸ்ரீசாந்த், இர்ஃபான் பதான் மற்றும் ஆர்.பி.சிங் போன்றோர் திறமைகளை காட்டத் தொடங்கினர். சிறந்த அணிகளை வேகப்பந்து வீச்சைக் கொண்டே தோற்கடிக்க முடியும் என்பது அவ்வப்போது நிரூபித்துக் காட்டப்பட்டது. ஆனாலும், அந்த சமயத்திலும் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் இருக்கவே செய்தது.

கங்குலியின் காலத்திற்குப் பிறகு, டிராவிட் மற்றும் சச்சின் ஆகியோரின் காலங்களை பெரிய தடுமாற்றங்களுடன் இந்திய அணி கடந்துசெல்ல வேண்டியிருந்தது. பின்னர் தோனியின் யுகம் தொடங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கான களம் இன்னும் விரிவடையத் தொடங்கியது. வேகப்பந்து விச்சாளர்களை வைத்து பல போட்டிகளை வென்று காட்டினார் தோனி மற்றும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தொடங்கினார்.

ஆனால், விராத் கோலியின் காலத்தில்தான் வேகப்பந்து வீச்சு என்பது இந்திய அணியில் முற்றிலும் புதிய பரிமாணத்தை அடைந்தது எனலாம். வெறும் 5 சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டு அணியை வழிநடத்தும் நிலையில் கோலி இருக்கிறார். அவர் வீரர்களின் உடல்திறனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கோலியின் காலத்தில், இஷாந்த் ஷர்மாவும் சாம்பலில் இருந்து உயிர்பெற்ற ஃபீனிக்ஸ் பறவையாக மிளிர்கிறார். அவரால் 5 விக்கெட்டுகளை ஒரே போட்டியில் எடுக்க முடிகிறது!
புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இருந்த தருணத்தில், பும்ராவும் புதிய புயலாக வந்து சேர்ந்தார். இந்தக் கூட்டணியைப் பார்த்து எதிரணிகள் கதி கலங்குகின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்துமுடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்த வேகப்பந்து டீம் சில புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. பும்ரா, ஷமி மற்றும் ஷர்மா அடங்கிய வேகப்பந்து குழு ஒட்டுமொத்த சராசரியாக 10.94 என்பதைப் பெற்றது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வேகப்பந்து குழுவும் செய்யாத சாதனை இது.

கடந்த 1986ம் ஆண்டு ஹெடிங்லேயில் நிகழ்த்தப்பட்ட 12.76 என்ற சராசரியே இதுவரையான சாதனையாக இருந்தது. மேலும், இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வேகப்பந்து குழுவினர் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 18.

மேற்கிந்திய தீவுகளில் ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து குழுவினர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளின் எண்ணிக்கை இதுவாகும். இத்தகைய அதிரடி வேகப்பந்து வீச்சுக் குழுவை இந்திய அணி வைத்திருப்பதால், போட்டியை நடத்தும் எதிரணி நாடுகள், பசுமையான பிட்சுகளை தருவதற்கே அஞ்சுகின்றன.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள இந்த விரும்பத்தகுந்த மற்றும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமானது, உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த உதவும் என்று கணிக்கப்படுகிறது. இந்திய அணியின் டெஸ்ட் வேகப்பந்து துறைக்கு பலம் சேர்க்க இன்னும் பலபேர் வரிசையில் நின்றுகொண்டு தங்களின் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர்.

கலீல் அகமது, நவ்திப் சைனி, தீபக் சஹார், முகமது சிராஜ், கம்லேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மவி மற்றும் அவேஷ் கான் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களின் கனவு உலகில் சிறகடித்துப் பறப்பதற்கான புதிய வானம் இப்போது கிடைத்துள்ளது..!